சஹாபாக்கள் என்போர் கண்ணியமானவர்கள்

Print

சஹாபாக்களை பின்பற்றலாமா

சஹாபாக்கள் என்பதன் பொருள்  ரசூல் (ஸல்) அவர்களின் தோழர்கள் மற்றும் அவர் காலத்தில் வாழ்ந்து குறைந்தது ஒரு தடவையாவது ரசூல் (ஸல்) அவர்களை பார்த்து இருந்தவர்களையும் குறிக்கும்.

சஹாபாக்கள் என்போர் கண்ணியமானவர்கள் நம்மளை விட பல மடங்கு உயர்ந்தவர்கள், மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களின் தியாகத்துக்கு யாரும் ஈடாக மாட்டார்கள். எனவே தான் ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

 

 "உங்களில் ஒருவர் உஹத் மலையளவு தங்கத்தைச் செலவிட்டாலும் அவர்களின் ஒருகைப்பிடி அளவுக்கு அல்லது அதன் பாதி அளவுக்கு செலவிட்டதற்குஈடாகாது என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்". புஹாரி-3673

 

நபித் தோழர்களை நாமும் மதிக்கிறோம் ஆனால் சஹாபாக்களைக் கண்ணியப்படுத்தி மதிப்பது வேறு  அவர்களைப் பின்பற்றி நடப்பது வேறு. குர்ஆனுக்கும், நபிமொழிக்கும் முரணாக எவ்வளவு பெரிய நபித் தோழர் நடந்திருந்தாலும் அதை நாம் வாழ்வில் கடைப்பிடிக்கக் கூடாது.


எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும், எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் மனிதன் பலவீனனாகவே படைக்கப்பட்டுள்ளான்    கல்லை வணங்குவான். இது வெறும் கல்தானே என்று உணரமாட்டேன்கிறான். மேலும் வரதர்ச்சனை வாங்குவது, கலப்படம் பண்ணுவது, தனது சுயனத்துக்காக உண்மையை மறைப்பது போன்றவற்றையும் அதிகம் அறிவுடைய்யவர்களே செய்கின்றனர்.

மனிதனுக்கு வழங்கப்பட்ட அறிவைக் கொண்டு சரியான நேர்வழியைக் கண்டறிய முடியாது என்பதற்கு இதை ஒரு அளவுகோலாகக் கொள்ளலாம்.


எனவே  மனிதனைப் படைத்த ஏக இறைவன் தான் அனைத்திலும் சரியான முடிவை அறிபவனாக இருக்கிறான். மனிதனுக்கு நேர்வளிகாட்டக்கூடிய பொறுப்பு, தகுதி இறைவனுக்கு மாத்திரமே உரித்தானது.

 

நேர்வழி காட்டும் அதிகாரம் எவருக்கும் இல்லை; அது எனக்கு மட்டுமே உரியது என்பது தான் இறைவனிடமிருந்து மண்ணுலகுக்கு வந்த முதல் கட்டளை.

முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்கள் இறைவனால் நேரடியாகப் படைக்கப்பட்டவர்கள். இறைவனது     ஆற்றலைக்கண்கூடாகக்கண்டவர்கள்.  வானவர்களை மிஞ்சும் அளவிற்கு அறிவாற்றல் வழங்கப்பட்டவர்கள்.

 


 "இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும் போது எனது நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை   அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்" என்று கூறினோம். குர்ஆன்-2:38

 

மனிதர்களிலேயே மாமேதையான ஆதம் நபி அவர்களே சுயமாக நேர்வழியைக் கண்டுபிடிக்க முடியாது.

ஆதம் (அலை) அவர்களே இறைவனிடமிருந்து வரும் வஹீயை  நேர்வழியை  மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றால் நபித் தோழர்களோமற்றவர்களோ அவரை விட உயர்ந்தவர்களா?

 

இந்த மார்க்கத்துக்கு சொந்தக்காரன் அல்லாஹ்தான் என்பதையும், சட்டம் ஏற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது மேலும் நபிமார்கள் அல்லாஹ்விடமிருந்து பெற்றுக்கொடுப்பவர்கள் தவிர வேறில்லை என்பவற்றை விளங்கிக்கொள்ள சில ஆதார்களை பதிகிறோம்.

"கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது ".  குர்ஆன் 39-3

 

"(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக" குர்ஆன் 6:106

 

 "உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்ட அழகானதைப் பின்பற்றுங்கள்"   குர்ஆன் 38-58

 

" தூதர்களில் நான் புதியவன் அல்லன். எனக்கோ, உங்களுக்கோ என்ன செய்யப்படும் என்பதை அறிய மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றவில்லை. நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை" எனக் கூறுவீராக". குர்ஆன் 46:9

 

 

"உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான்". குர்ஆன் 49:16

 

"இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்"  குர்ஆன் 5:3

 

"அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் நட்டமடைந்தனர்; வழிகெட்டனர்; நேர்வழி பெறவில்லை". குர்ஆன் 6:140

 

"அவர் (முஹம்மத்) மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை.  அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை. அழகிய தோற்றமுடைய வலிமை மிக்கவர் (ஜிப்ரீல்) அதைக் கற்றுக் கொடுக்கிறார்".குர்ஆன் 53-3,4,5,6

 

மேற்கண்ட வசனங்கள் பல்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி எந்த மனிதரின் கூற்றையும் பின்பற்றலாகாது என்பதை மிகத் தெளிவாக அறிவிக்கின்றன.

ரசூல் (ஸல்)  அவர்கள் வஹி என்னும் இறைச்செய்தி வருவதற்கு முன் தாமாக எடுத்த முடிவுகள் தவறு என்று அல்லாஹ் சுட்டிக்காட்டி கண்டித்துருக்கிறான். குர்ஆனில் பல இடங்களில் ரசூல் (ஸல்) சுயமாக எடுத்த முடிவுகள் தவறு என்று கண்டித்த வசங்கள் இருந்தும் ஓரிரு விடயங்களை புரிந்துகொள்வதட்காக பதிகிறேன்.

பணயத் தொகை பெற்றுக் கொண்டு போர்க் கைதிகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடுவித்தனர். இறைவனின் கட்டளையை எதிர்பாராமல் இவ்வாறு செய்தது தவறு என்று இறைவன் கண்டித்துத் திருத்துகிறான்.

"பூமியில் எதிரிகளை வேரறுக்கும் வரை சிறைப் பிடித்தல் எந்த நபிக்கும் தகாது. நீங்கள் இவ்வுலகின் பொருட்களை நாடுகின்றீர்கள்! அல்லாஹ்வோ மறுமையை நாடுகிறான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்"      குர்ஆன்8-67


"முன்னரே அல்லாஹ்வின் விதி இல்லாதிருந்தால் நீங்கள் (கைதிகளை விடுவிப்பதற்குப் பிணைத் தொகை) பெற்றுக் கொண்டதற்காகக் கடும் வேதனை உங்களுக்கு ஏற்பட்டிருக்கும்".குர்ஆன்8-68

தேனை இறைவன் நமக்கு ஹலாலாக்கியுள்ளான். ஆனால் தமது மனைவியின் மீதுள்ள கோபம் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இனி தேன் சாப்பிட மாட்டேன் என்று கூறி தம் மீது தேனை ஹராமாக்கிக் கொண்டார்கள். ஆனால் இறைவன் இதைக் கண்டித்துத் திருத்துகிறான்.

"நபியே! உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்". குர்ஆன் 66:1

மார்க்க விஷயத்தில் இறைவனின் வஹீ இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது மார்க்க ஆதாரமாகாது என்றால் நபித் தோழர்களின் செயல்களோ, மற்றவர்களின் கருத்துக்களோ எப்படி மார்க்க ஆதாரமாக அமைய முடியும்?

நபித் தோழர்களும் மனிதர்களே! அவர்களிடமும் தடுமாற்றங்களும், தவறான முடிவுகளும் ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்)  அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னறிவிப்புச் செய்து சென்றுள்ளனர்.

நியாயத் தீர்ப்பு நாளில் மக்களெல்லாம் பரபரப்புடன் நிற்கும் போது நடக்கும் ஒரு நிகழ்ச்சியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

"என் தோழர்களில் சிலர் இடது புறமாகப் பிடிக்கப் படுவார்கள். (அதாவது நரகத்திற்கு இழுத்துச் செல்லப் படுவார்கள்) அப்போது நான் ``அவர்கள் என் தோழர்கள்! அவர்கள் என் தோழர்கள்! என்று கூறுவேன். அதற்கு இறைவன் ``நீ அவர்களைப் பிரிந்தது முதல் வந்த வழியே அவர்கள் திரும்பிச் சென்று கொண்டே இருந்தனர் என்று கூறுவான். அப்போது நான் ``அவர்களுடன் நான் இருந்த வரை அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தேன். எப்போது என்னை நீ கைப்பற்றிக் கொண்டாயோ (அப்போது முதல்) நீயே அவர்களைக் கண்காணிப்ப வனாவாய் என்று என் சகோதரர் ஈஸா கூறியது போல் நானும் கூறிவிடுவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்".            புகாரி-3349

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் சில நபித் தோழர்கள் தவறான பாதைக்குச் சென்று விடுவார்கள் என்பது முன்னரே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவனால் அறிவிக்கப்பட்டு அவர்கள் அதனை நமக்கு அறிவித்துச் சென்று விட்டனர். இந்த நிலையில் நபித் தோழர்களின் கூற்றுகள் மார்க்க ஆதாரம் என்று சொல்ல முடியுமா?

சஹாபாக்களின் குரான், ஹதீசுக்கு மாற்றமாக சொன்னவைகலும், செய்தவைகளும் 

 

***உமர் (ரலி) அவர்கள் உம்மத்திலே 2ம் கலீபா மிகச்சிறந்த நபித்தோழர் எந்த அளவுக்கு என்றால் பல சந்தர்ப்பங்களில் ரசூல் (ஸல்) அவர்களுக்கு  வஹி வருவதற்கு முன் உமர் (ரலி) அவர்கள் ஆலோசனை கூறுவார்கள் அதன் பின் அதேபோல் அல்லாஹ்விடம் இருந்து வஹி வந்து விடும். எனவே தான் ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் 'உமர் நாவில் அல்லாஹ் பேசுகிறான்' என்று 

அப்படிப்பட்ட உமர் (ரலி) அவர்களுக்கும், இன்னும் சில சஹாபாக்களுக்கும் ரசூல் (ஸல்) மரணித்து இருக்கிறார்கள் என்பது புரியாமல் இருந்ததது. யாராவது நபியவர்கள் மரணித்தார்கள் என்று சொன்னால் அவரை கொன்றுவிடுவேன் என்றார்கள். பின் அபூபக்கர் (ரலி) வந்து  "(முஹம்மதே!) நீர் இறப்பவரே. அவர்களும் இறப்போரே".(39:30) வசனத்தை ஓதிய பின்தான் ஏற்றுக்கொண்டார். அப்போதுதான் இந்த குரான் வசனம் இறங்கியதுபோல் சஹாபாக்கள் உச்சரித்துக்கொண்டிருந்தார்கள்.


உமர் (ரலி) அவர்கள் மிகச் சிறந்த நபித் தோழர் என்றால் அவர்களால் அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ள இயலவில்லை. வியாபாரம் தொடர்பான பணிகளில்      அவர்கள் ஈடுபட்டதன் காரணமாக அவர்கள் பல விஷயங்களை அறிந்து கொள்ள முடியாமல் இருந்துள்ளனர் என்பதற்கு அவர்களே வாக்குமூலம் தந்து விட்டனர்.

 

"மிகச் சிறந்த நபித் தோழரான உமர் (ரலி) அவர்கள் குளிப்புக்காக தயம்மும் செய்வதை அறியாமல் தயம்முமை மறுத்து இருந்துள்ளார்கள்".

முஸ்லிம்-553

 

கடமையான குளிப்புக்காகவும் தயம்மும் செய்யலாம் என்று திருக்குர்ஆனில் தெளிவாகக் கூறப்பட்டிருந்தும் அந்தச் சட்டம் உமர் (ரலி) அவர்களுக்குத் தெரியவில்லை. 

 

***தயம்மும் சலுகையை மறுத்த இப்னு மஸ்வூத்

 "நான் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) , அபூ மூஸா (ரலி) ஆகயோருடன் அமர்ந்திருந்தேன். அப்போது அபூ மூஸா (ரலி) அவர்கள் ``ஒருவருக்கு குளிப்பு கடமையாகி தண்ணீர் கிடைக்காவிட்டால் என்ன செய்ய வேண்டும்என்று அப்துல்லாஹ் பின் மவூதிடம் கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் தண்ணீர் கிடைக்கும் வரை தொழக் கூடாது என்று விடையளித்தார்கள். தயம்மும் செய்வது போதும் என்று அம்மாருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்திக்கு உமது பதில் என்னஎன்று அபூ மூஸா (ரலி) திருப்பிக் கேட்டார்கள். அதற்கு இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அவர் சொன்னதைத் தான் உமர் (ரலி) ஏற்றுக் கொள்ளவில்லையே என்று விடையளித்தார்கள். அப்போது அபூ மூஸா (ரலி) அவர்கள் ``அம்மார் கூறுவதை விட்டு விடுவோம். இந்த 5:6 வசனத்தை என்ன செய்யப் போகிறீர்என்று திருப்பிக் கேட்டார்கள். அதற்கு என்ன பதில் சொல்வது என்று அறியாமல் ``நாம் இதை அனுமதித்தால் ஒருவர் குளிர் அடிக்கும் போது கூட தயம்மும் செய்து தொழ ஆரம்பித்து விடுவார் என்று இப்னு மஸ்வூத் (ரலி) பதிலளித்தார்கள்.புகாரி-346

 

உளுச் செய்வதற்கு தண்ணீர் கிடைக்கா விட்டால் தயம்மும் செய்து தொழலாம். அது போல் குளிப்பு கடமையாகி குளிப்பதற்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் குளிப்பதற்குப் பகரமாகவும் தயம்மும் செய்யலாம். இது இன்றைக்கு அனைத்து முஸ்லிம் அறிஞர்களும் தெரிந்து வைத்திருக்கின்ற சட்டமாகும்.

ஆனால் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் இதனை மறுக்கிறார்கள். அபூ மூஸா (ரலி), இப்னு மவூதுக்கு எதிராக ஒரு நபி மொழியையும், ஒரு திருக்குர்ஆன் வசனத்தையும் எடுத்துக் காட்டுகிறார்கள்  இருந்தும் மறுக்கிறார்கள்.

 

***உமர் (ரலி) அவர்களின் மற்றுமொரு சம்பவம். ஒரு ஊரில் ப்ளேக் நோய் இருந்தால் அவ்வூருக்கு போகக்கூடாது அதேநேரம் அவ்வூரிலிருந்தும் வெளியேறக்கூடாது. இந்தச்சட்டம் உமர் (ரலி) அவர்களுக்கும் அவருடன் சிரியாவுக்கு செல்ல படை திரண்டிருந்த சஹாபாக்களுக்கும் தெரியாமல் ஆலோசிக்கும் போது அப்துர் ரகுமான் இப்னு அவ்ப் நான் ரசூல் (ஸல்) இடம் செவியுடிருக்கிறேன் மேற்குறிப்பிட்ட செய்தியை. (ஹதீஸின் சுருக்கம்)

 

***தமத்து முறையில் ஹஜ் செய்வதை ரசூல் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள்.(புகாரி-1572) அல்லாஹ்வும் குர்ஆனில் (2:196) அனுமதிக்கிறான். இது மிகப்பெரிய நபித்தோழர்களான  உமர் (ரலி), உஸ்மான் (ரலி) அவர்களுக்கு தெரியவில்லை. உஸ்மான் (ரலி) க்கு தெரியவில்லை. (புகாரி-1563)

"தமத்துவு முறையில் ஹஜ் செய்வது பற்றி அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் ஒரு சிரியா வாசி கேட்டார். அது அனுமதிக்கப்பட்டது தான் என்று அவர்கள் விடை யளித்தார்கள். உங்கள் தந்தை (உமர்) அவர்கள் அதைத் தடுத்திருக்கிறாரே அது பற்றிக் கூறுங்கள் என்று அவர் கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் ``என் தந்தை ஒரு காரியத்தைத் தடுக்கிறார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைச் செய்துள்ளனர் என்றால் என் தந்தையின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமாநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமாஎன்பதற்கு நீ பதில் சொல் என்றார்கள். அதற்கு அந்த மனிதர் ``அல்லாஹ்வின் தூதருடைய கட்டளையே பின்பற்றப்பட வேண்டும் எனக் கூறினார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் ``நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமத்துவு முறையில் ஹஜ் செய்துள்ளார்கள் என்று பதில் கூறினார்கள்".  திர்மிதி-753

 

எல்லோருக்கும் தெரிந்த சட்டம் உமர், உஸ்மான்(ரலி) அவர்களுக்கு தெரியவில்லை. சுட்டிக்காட்டியும் ஏற்றுக்கொள்ளவில்லை.

***தாம்பத்தியத்தில் ஈடுபட்டு, ஆணுக்கு விந்து வெளிப்பட்டால் குளிப்பது கடமை. விந்து வெளிப்படாவிட்டால் குளிப்பது கடமையில்லை என்று ஆரம்பத்தில் சட்டம் இருந்தது. பின்னர் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு விந்து வெளிப்பட்டாலும் வெளிப்படாவிட்டாலும் குளிப்பது கடமை என்று மாற்றப்பட்டது.

ஆனால் மிகச் சிறந்த பல நபித் தோழர்கள் 'விந்து வெளிப்படாத வகையில் உடலுறவு கொண்டால் குளிப்பது கடமையில்லை'என்று தீர்ப்பளித்துள்ளனர்.

ஒருவர் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு விந்து வெளிப்படாவிட்டால் என்ன செய்ய வேண்டும்? என்று நான் உஸ்மான் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ``மர்மதானத்தைக் கழுவி விட்டு தொழுகைக்குச் செய்வது போல் உளுச் செய்ய வேண்டும் என்று விடையளித்தார்கள். புகாரி-179

 

இன்றைக்கு ஒட்டு மொத்த முஸ்லிம்களும் அறிந்து வைத்திருக்கின்ற சட்டம் மிகச் சிறந்த நபித் தோழர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

***"இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்யக் கூடாதுதிரு மணப் பேச்சும் பேசக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்".

முஸ்லிம்-2522

 

இந்தத் தடையை இப்னு அப்பாஸ் (ரலி) அறியாமல் இருந்ததுடன் தமது சின்னம்மா மைமூனா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் தான் திருமணம் செய்தார்கள் எனவும் கூறி வந்தார்கள்.புகாரி-1837

 

ஆனால் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட மைமூனா (ரலி) அவர்கள் இதை மறுத்திருக்கிறார்கள்.முஸ்லிம்-2529

***இன்னுமொரு மாற்றமான செயலைப்பாருங்கள்.

''ஒருவரை ஒருவர் வெட்டிக் கொலை செய்து காபிர்களாகி விடாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையில் எச்சரிக்கை செய்தார்கள்". புகாரி-121

ஆனால் இந்த எச்சரிக்கைக்குப் பிறகு நபித் தோழர்கள் தமக்கிடையே வாள் ஏந்தி போரிட்டு ஒருவரை ஒருவர் வெட்டிக் கொலை செய்யும் நிலைக்கு ஆளாயினர்.

ஆயிஷா (ரலி) தலைமையில் அணி வகுத்தவர்களும் நபித் தோழர்களே. சொர்க்கவாசிகள்  என்று நபிகள் நாயகம் )ஸல்) அவர்களால் நற்செய்தி கூறப்பட்டவர்களும் அவர்களில் இருந்தனர்.

அலி (ரலி) அவர்களின் தலைமையில் அணி வகுத்தவர்களும் நபித் தோழர்களே. சொர்க்கவாசிகள் என்று நபிகள் நாயகம்  ஸல்) அவர்களால் நற்செய்தி கூறப்பட்டவர்கள் இந்த அணியிலும் இருந்தனர். தலைமை தாங்கிய இருவரும் சொர்க்கவாசிகள் என்று நற்செய்தி கூறப்பட்டவர்கள் தாம்.

அப்படி இருந்தும் ஒருவருக்கு எதிராக மற்றவர்கள் ஆயுதம் ஏந்தி போர் செய்தார்கள்.  (அவர்கள் அனைவரையும் அல்லாஹ் மன்னிப்பானாக(

அவர்களை விமர்சனம் செய்வதற்காக இதனை நாம் எடுத்துக் காட்டவில்லை.

மனிதர்கள் என்ற முறையில் இத்தகைய பாரதூரமான காரியத்தையே அவர்கள் செய்திருக்கும் போது அவர்களின் நடவடிக்கை எப்படி மார்க்க ஆதாரமாக ஆக முடியும் என்பதற்காகவே இதனை எடுத்துக் காட்டுகிறோம்.

இது போலவே முஆவியா (ரலி) தலைமையிலும்,  அலி (ரலி) தலைமையிலும் நபித் தோழர்கள் அணி திரண்டு போர் செய்தனர்.   ஒருவரை ஒருவர் கொலை செய்யும் நிலை ஏற்பட்டது.

கொலை செய்தவர்களிலும் நபித் தோழர்கள் இருந்தனர். கொல்லப்பட்டவர்களிலும் நபித் தோழர்கள் இருந்தனர்.

 

***நபிகள் நாயகம் (ஸல்)  அவர்கள் ஆரம்ப காலத்தில் ருகூவு செய்யும் போது இரு கைகளாலும் முட்டுக் கால்களைப் பிடிப்பதற்குப் பதிலாக இரு கைகளையும் இணைத்து தொடைகளுக்கு மத்தியில் வைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது. பின்னர் இது மாற்றப்பட்டு இரு கைகளால் முட்டுக் கால்களைப் பிடிக்கும்படி நபிகள் நாயகம் (ஸல்(    அவர்கள் வழிகாட்டினார்கள். அப்துல்லாஹ் பின் மஸ்வூத்  (ரலி) அவர்கள் நபிகள் நாயகம்  (ஸல்)    அவர்கள் மரணித்த பின்பும் மாற்றப்பட்ட இந்த முறையிலேயே தொழுது வந்தார்கள்.முஸ்லிம்-831

 

***"நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆரம்ப காலத்தில் வெளியூர்களுக்குச் செல்லும் ஆண்கள் அங்குள்ள பெண்களைக் குறிப்பிட்ட காலம் வரை வாடகை பேசி திருமணம் செய்து வந்தனர். அதாவது ஒரு மாதம் வரை உன்னை மனைவியாக வைத்துக் கொள்கிறேன் என்பது போல் காலக்கெடு நிர்ணயித்து திருமணம் செய்வார்கள். காலக்கொடு முடிந்ததும் அப்பெண்ணை விட்டுவிட்டு ஊருக்கு வந்து விடுவார்கள். அரபுகளிடம் காணப்பட்ட இந்த வழக்கத்தை ஆரம்பத்தில் நபிகள் நாயகம்)ஸல்) அவர்கள் தடை செய்யாமல் இருந்தனர்" பின்னர் தடுத்தனர்.(புகாரி-4216)  இருந்தும் நபித் தோழர்களில் சிலர் இந்த வழக்தத்தைக் கடைப்பிடித்தனர்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்(    அவர்கள் யாருடைய அறிவுக்கு அல்லாஹ்விடம் துஆ செய்தார்களோ (புகாரி-75) அந்த இப்னு அப்பாஸ் )ரலி) அவர்களுக்கு இந்தச் சட்டம் தெரியவில்லை. (புகாரி -5116)

 

 

***இன்னுமொரு நபிவழிக்கு முரணான சட்டம்!

ஒருவருக்கு குளிப்பு கடைமையாகி விட்டால் அந்த நிலையிலேயே சஹர் செய்து நோன்பு நோற்கலாம்.சுபுஹ் நேரம் வந்ததும் தொழுகைக்காகக் குளித்துக் கொள்ள லாம். நபிகள் நாயகம்)ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளார்கள்.

ஆனால் அதிகமான ஹதீஸ்களை அறிந்திருந்த அபூ ஹுரைரா (ரலி) அவர்களுக்கு இந்தச் சட்டம் தெரியாமல் இருந்து பின்னர் திருத்திக் கொண்டார்கள். (புகாரி 1926)

***லுஹாத்தொலுகையை மறுத்த சஹாபாக்கள்!

முற்பகலில் லுஹா என்ற தொழுகை உள்ளது என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம்.     (புகாரி-1981)

இதை ஆயிஷா (ரலி) மறுத்துள்ளார்கள்.   (புகாரி-1128)

மேலும் உமர் (ரலி)  இப்னு உமர் (ரலி), அபூபக்கர் (ரலி)  லுஹாத்தொழுததில்லை. (புகாரி-1175)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வணக்கம் தொடர்பான செய்தி அவர்களின் மனைவிக்கும் தெரியாமல் இருந்துள்ளது. நபிகள் நாயகம்  ஸல்   அவர்களை அப்படியே பின்பற்றுவதில் தனித்து விளங்கிய இப்னு உமர்   ரலி     அவர்களுக்கும் தெரியாமல் இருந்துள்ளது.

***தங்களின் வீடல்லாத வீடுகளுக்குல் நுழைய முன் 3முரை சலாம் சொல்லவேண்டும் பதில் வராவிட்டால் திரும்ப வேண்டும் எண்டு ரசூல் (ஸல்) சொன்னது உமர்   ரலிக்கு தெரியவில்லை.      அபூமூசா 3முரை சலாம் சொல்லியும் உமர் (ரலி( ஒரு அலுவலில் இருந்ததால் பதில் சொல்லவில்லை அனவே அவர் திரும்பி விட்டார். கோபம் கொண்ட உமர் அபூமூஸா விடம் இதற்கான சாட்ச்சியை கொண்டுவரவேண்டும் என்று சொல்ல பின் அபூமூசா முழு ஊரிலும் அலைந்து திரிந்து நபியிடம் கேள்வியுற்ற ஒரே ஒரு  சிறுவரை (அபூ சையத்)  சாட்சி சொள்ளவத்தார் பின் உமர் (ரலி) தான் தொழிலில் அதிகம் ஈடுபட்டதால் எனக்கு சில சட்டங்கள் தெரியவில்லை என்பதை ஒப்புக்கொண்டார். புகாரி-7353

 

***தலாக் விடயத்தில் சட்டத்தை மாற்றிய உமர் (ரலி) 

ஒரு கணவன் முதல் தடவை விவாக ரத்து செய்யும் போது முத்தலாக் என்றோ, தலாக் தலாக் தலாக் என்றோ கூறினால் அது மூன்று தடவை தலாக் கூறியதாக ஆகாது. மூன்று தலாக் என்று கூறினாலும், மூவாயிரம் தலாக் என்று கூறினாலும் தனக்கு இஸ்லாம் வழங்கிய ஒரு வாய்ப்பைத் தான் அவன் பயன்படுத்தியுள்ளான். இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்)  அவர்களின் காலத்தில் நடைமுறை இருந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இது தான் நடைமுறை என்று தெரிந்திருந்தும் உமர் (ரலி) அவர்கள் அதை மீறி நபிவழிக்கு மாற்றமான சட்டத்தைக் கொண்டு வந்தார்கள் என்பதை ஹதீஸ் நூலில் நாம் காண்கிறோம்.

"நபிகள் நாயகம் (ஸல்)   அவர்களின் காலத்திலும்அபூ பக்ர் (ரலி  அவர்களின் காலத்திலும்உமர் )ரலி) அவர்கள் ஆட்சியில் இரண்டு ஆண்டுகளும் மூன்று தலாக் எனறு கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது. நிதானமாக முடிவு செய்யும் விஷயத்தில் மக்கள் அவசரப்படுகிறார்கள். எனவே மூன்று தலாக் என்று கூறுவதை மூன்று தலாக் என்றே சட்டமியற்றினால் என்னஎன்று கூறி அதை உமர் (ரலி  அவர்கள்சட்டமாகவும் ஆக்கினார்கள்".(முஸ்லிம் 2689)

 

***இரண்டு அத்தியாயங்களை மறுத்த இப்னு மஸ்வூத் 

திருக்குர்ஆனில் 114 அத்தியாயங்கள் உள்ளதை உலக முஸ்லிம்கள் அனைவரும் அறிந்து வைத்துள்ளோம்.

ஆனால் மிகச் சிறந்த நபித் தோழரான இப்னு மஸ்வூத் (ரலி  அவர்கள் 113, 114ஆகிய இரண்டு அத்தியாயங்களை மறுத்து வந்தார்கள். தமது ஏட்டில் இவ்விரு அத்தியாயங்களையும் அவர்கள் பதிவு செய்யவில்லை.(அஹ்மத்-20244)

 

***நபிகள் நாயகம் (ஸல்)     அவர்களின் காலத்தில் நடைமுறையில் இருந்த ஒன்றையும் என்னால் காண முடியவில்லை என்று அனஸ் (ரலி) கூறினார்கள். ``ஏன் தொழுகை இருக்கிறதே என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் ``தொழுகையிலும் பாழ்படுத்த வேண்டிய அளவுக்குப் பாழ்படுத்திவிட்டீர்களே என்று திருப்பிக் கேட்டார்கள்.புகாரி-530

 

மேலே குறிப்பிட்டது போல் இன்னும் குரான், நபி மொழிக்கு முரணான நிறைய சம்பவங்கள் இருந்தும் கட்டுரை பெரிதாகும் என்ற எண்ணத்தால்       பதியவில்லை. விளங்கிக்கொள்ளும் மக்களுக்கு இது போதும் என்று நினைக்கிறேன்.

 

எனவே தான் நபித் தோழர்கள் நம்மை விடப் பல மடங்கு சிறந்தவர்கள் என்றாலும் அவர்கள் மனிதர்கள் என்ற அடிப்படையை நாம் மறந்து விடக் கூடாது. 

இந்த கட்டுரையின் சுருக்கம்! மேலே குறிப்பிடப்பட்டதில் அல்லாஹ் தான் சட்டம் இயற்றக்கூடியவன், அவனே நேர்வழி காட்டக்கூடியவன். நபி  ஸல்  அவர்கள் கூட வஹி வரமுன் மார்க்கம் என்று சுயமாக செய்தவைகளை, சொன்னவைகளை அல்லாஹ் கண்டித்துள்ளான்.  மேலும் மார்க்க விடயங்களை ரசூல் )ஸல்(ஊடாக அல்லாஹ் அருளியதால் மக்கள் நினைக்கக்கூடும் ரசூல் (ஸல்(       அவர்கள் சுயமாக சொல்வதும் மார்க்கமென்று! இந்த சந்தேகத்தைப்போக்கவும்,  அல்லாஹ் சொன்னதற்கு மாற்றமாக யாரும் மார்க்க விடயத்தில் சொல்லக்கூடாது என்பதற்காகவும், மக்களுக்கு உணர்த்தும் முகமாக பின்வருமாறு அல்குர்ஆனில் சொல்லுகிறான்.

"சில சொற்களை இவர் (முஹம்மத்) நம்மீது இட்டுக்கட்டியிருந்தால் வலது கையால் இவரைத் தண்டித்திருப்போம்.       பின்னர் அவரது    நாடி  நரம்பைத்            துண்டித்திருப்போம். உங்களில் எவரும் அவனைத் தடுப்பவர் அல்லர்".(69-44,45,46)

 சஹாபாக்களை விட எத்தனையோ மடங்கு உயர்ந்த நிலையில் உள்ள ரசூல் (ஸல்)   அவர்களுக்கே இந்த நிலைமை என்றால் சஹாபாக்களின் சொல், செயல்கள் மார்க்க ஆதாரமாகுமா?

எனவே குரான், ஹதீஸ் அடிப்படையில் மாத்திரம்  நாமும் நமது வணக்க வழிபாடுகளை அமைத்துக்கொண்டு இவ்வுலகிலும் மறு உலகிலும் வெற்றி கொள்ள முயற்சிப்போம்.

News flash

 •  ஜனாஷாவிட்கு செய்ய வேண்டிய கடமைகள்

   

  =========================

  அஸ்ஸலாமு அழைக்கும் 

  ஆண்களுக்கான மார்க்க வகுப்பு 

  திங்கள் கிழமை மாலை 7:30 மணி முதல் 9:30 மணி வரை 

  Langley Green Community Centre ல்

  நடைபெறும் உங்கள் அனைவரையும் 

  அன்புடன் அழைக்கின்றோம்  

Events

Prayer Timetable

 If you cant View this
Download Adobe reader