சுவர்க்கம் நரகம்

Print

சோதனை இன்றி சுவர்க்கம் இல்லை!

நம்மில் அதிகமானவர்கள் இஸ்லாமியப்பெண்ணின் வயிற்றில் பிறந்திருந்தும் கூட, இஸ்லாமிய பெயரைச்சூட்டிக்கொண்டு இருந்தும் கூட, புத்தி தெரிந்த    நாள் முதல் நான் ஒரு இஸ்லாமியர் என்று தெரிந்திருந்தும் கூட ஒரு தொழுகைக்கும் பள்ளிக்கு வராத முஸ்லிம்களை பார்க்கலாம். பெயரளவில் முஸ்லிமாக வாழ்வதை  பார்க்கலாம்.

 

            அல்லாஹ் அவரைச்சொதிப்பதில் நியாயம் உண்டு. ஆனால் ஐந்து நேரமும் பள்ளிக்கு போய் தொழுது கொண்டு மார்க்கக்கடமைகளை சரிவரச்செய்து கொண்டு இருப்பவர்களையும் சோதனைக்கு உள்ளாக்கிறான்  என்றால் அல்லாஹ் அதற்கும் ஒரு காரணத்தை வைத்துள்ளான். இதைப்பற்றி அல்லாஹ் குரானில் சொல்லும் போது 

 

 

"உங்களில் தியாகம் செய்தோரையும், பொறுமையாளரையும் அடையாளம் காட்டிட உங்களைச் சோதிப்போம்"

(அல்குரான்-47:31)

 

இதில் அல்லாஹ் சொல்லும் விடயம், தியாகம் செய்வோர் இருக்கலாம் ஆனால் உண்மையில் தியாகம் செய்வோர் யார், உண்மையான முறையில் பொருமையாளர்கள் யார் என்பதை கண்டு கொள்வதற்காகவே என்றும் கூறுகிறான்.

அல்லாஹ் நமக்கு அழித்துள்ள வாழ் நாளை வைத்தே நம்மை சோதிப்பதற்காகவே படைத்துள்ளான் என்று சொல்லலாம்.

 

நமது உலக வாழ்வைப்பொருத்தவரை 50 அல்லது 60 வருடங்கள். ஆனால் கப்ருடைய வாழ்க்கையைப் பாருங்கள் அது ஆயிரம், பத்தாயிரம், ஒரு லட்சம் அல்லது அதற்கு மேல் இருக்கலாம். அந்த கப்ருடைய வாழ்க்கை தான் நமக்கு

சுவர்க்கத்துடைய கதவு திறக்கப்பட வேண்டுமா அல்லது நரகத்தின் கதவு திறக்கப்பட வேண்டுமா என்று தீர்மானிக்கும் இடம்.

 

இந்த கப்ருடைய வாழ்க்கைக்கு பின் மஃஷருடைய வாழ்க்கை இருக்கிறது. மஃஷருடைய வாழ்க்கையை பற்றி ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் ஐம்பதாயிரம் வருடங்கள் என்றார்கள்.

 

"அல்லாஹ் மறுமை நாளில் மக்களை மஹ்ஷர் மைதானத்தில் ஒன்று கூட்டுவான்மறுமையில் ஒரு நாள் என்பது இவ்வுலகின் ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமமாகும்"   (முஸ்லிம்-1803)

 

 

எனவே நம்முடைய இந்த ஐம்பது வருட வாழ்க்கை அந்த ஐம்பதாயிரம் வருடங்களை தீர்மானிக்கப்போகிறது. அந்த ஐம்பதாயிரம் வருடங்கலைப்பொருத்தவரை சூரியன் தலைக்கு மேலால் கொண்டு நிறுத்தப்படும் இந்த கஷ்டமான, துன்பகரமான வேதனைகளில் மக்கள் அல்லோலப்படும் சந்தர்ப்பத்தில் சில மக்கள் மட்டும் குளிர்ந்த நிழலுடைய இடத்தை அல்லாஹ் கொடுக்கிறான். அவர்கள் தான்

 

"அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள்நீதியை நிலை நாட்டும் தலைவர்அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர்பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர்அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள்உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, 'நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்என்று சொல்லும் மனிதர்தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர்தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்"  (புஹாரி-660)

 

 

சில மக்கள் மட்டும் சந்தோஷமாக, நிம்மதியாக இருக்கும் இந்த குளிர்ந்த இடத்தை தீர்மானிப்பது இந்த உலக 50 வருட வாழ்க்கை தான். இந்த மஃஷருக்கு பின் சுவர்க்கம், நரகம் என்று இரண்டு விடயம் உள்ளது. ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

 

"வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், 'என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை (சொர்க்கத்தில்) நான் தயார்படுத்தி வைத்துள்ளேன்" என்று கூறினான்.

(முஸ்லீம்-5437)

 

அல்லாஹ்வும் அல்குரானில் இதை உறுதி செய்கிறான்.

 

"அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குப் பரிசாக அவர்களுக்காக கண்குளிரும் வகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை எவரும் அறிய மாட்டார்"     (அல்குரான்-47:31) 

அதே போல் நரகத்தைப்பற்றி தூதரவர்கள் சொன்னார்கள்

 

 "உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்" என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமான தாயிற்றே" என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், '(அப்படியல்ல.) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்" என்றார்கள்.

(புஹாரி-3265)

 

 

மரணத்துக்குப்பின்     இவ்வளவு   பெரிய வாழ்க்கையை தந்து விட்டதனால் தான் அல்லாஹ்   நம்மை சோதிப்பது நியாயமானதாக இருக்கிறது.

நாம் நினைக்கிறோம் நாம் தான் அதிகம் சோதிக்கப்படுகிறோம் என்று ஆனால் ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

 

 

 "அல்லாஹ்வின் தூதரே! மக்களில் அதிகமாகச் சோதிக்கப்பட்டவர்கள் யார்?'' என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) "நபிமார்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள். ஒவ்வொரு மனிதனும் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்குச் சோதிக்கப்படுவான். அவனுடைய மார்க்கப் பிடிப்பு உறுதியாக இருந்தால் அவனுடைய சோதனைகள் அதிகரிக்கப்படும். அவனுடைய மார்க்கப் பிடிப்பு உறுதியற்றதாக இருந்தால் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு அவன் சோதிக்கப்படுவான். ஒரு அடியான் பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் மீது எந்தப் பாவங்களும் இல்லாமல் ஆகின்ற வரை அவனை விட்டும் சோதனைகள் நீங்காமலேயே இருக்கும்'' என்று கூறினார்கள். 

(திர்மிதி-2322)

 

 

 

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்காக சஹாபாக்கள் எப்படி எல்லாம் சோதிக்கப்பட்டார்கள் என்று பாருங்கள். ஹப்பாப் இப்னு அரத் (ரலி) அவர்கள் ஒரு அடிமை. இவர் ஒரு பெண்ணிடத்தில் பட்டறை வேலை (வாள், கத்தி, கோடரி செய்யுமிடம்) செய்கிறார். ஒரு நாள் இந்த ஹப்பாப் வெளியில் சென்று வருகிறார், பட்டறையில் மக்கள் இவருக்காக காத்திருக்கிறார்கள். இவரை பார்த்த மக்கள் என்ன ஹப்பாபே இவ்வளவு ஆனந்தமாக இருக்கிறீர்களே என்ன விடயம் என்று வினவ ஹப்பாப் (ரலி பதிலளித்தார்கள். நான் ஒரு மனிதரை சந்தித்தேன் அவர் தான் முஹம்மது (ஸல்) அவர்கள்  அவர் உண்மையை சொல்கிறார், சரியாகச்சொல்கிறார். நானும் இஸ்லாத்தை ஏற்று வந்துள்ளேன் அது தான் என் சந்தோசம் முகத்தினூடாக வெளிப்படுகிறது என்றார்.  

இச்செய்தி அவருடைய எஜமானிக்கு தெரிய வந்ததும், தனது சகோதரனையும், அடியாட்களையும் அனுப்பி ஹப்பாப் (ரலி) அவர்களை அடித்து துன்புறுத்தி இஸ்லாத்தை விட்டு விடுமாறு வற்புறுத்துகிறார்கள். ஆனால் ஹப்பாப் (ரலி) உறுதியாக இருக்கிறார்கள்.

 

எப்படி பிலால் (ரலி) அவர்களை உடலில் ஆடை இல்லாமல் சுடு மணலில் போட்டு புரட்டி பாராங்கட்களை நெஞ்சின் மீது வைத்திருந்தும் எப்படி  கொள்கையை விடாமல் இருந்தாரோ, அதே போல் இந்த ஹப்பாப் (ரலி) அவர்களையும் இந்த பட்டறையில் அவரை அடித்து கட்டி தூக்கிய நிலையில் கீழே இரும்பை வளைக்கக்கூடிய அதி உஷ்ணமுள்ள நெருப்பை மூட்டுகிறார்கள். இதன் மூலம் கடும் வேதனை கொடுக்கிறார்கள். எந்தளவுக்கென்றால் ஹப்பாப் (ரலி) அவர்களின் உடம்பிலிருந்து  சதைகள் உருகி வடியும் அளவுக்கு துன்பதைக்கொடுக்கிரார்கள்.

 

ஹப்பாப்  (ரலி) அவர்கள் ரசூல் (ஸல்) அவர்களிடம் ஓடோடிப்போய் யாரசூலுல்லாஹ்   யாரசூலுல்லாஹ் எங்களை அடித்தால் பரவாயில்லை, நெருப்பின் மேல் கட்டித்தூக்கி வேதனை செய்கிறார்கள் யாரசூலுல்லாஹ் என்று முறையிட்டதுடன் எங்களுக்காக அல்லாஹ்விடத்தில் உதவி தேடுங்கள் என்றும்  சொன்னார்கள். அதற்கு ரசூல் (ஸல்) அவர்கள் எவ்வளவு வேதனைகள், துன்பங்களை அனுபவித்து வந்த ஹப்பாபை பார்த்து ஹப்பாபே நீங்கள் அவசரப்படுகிறீர்கள். அல்லாஹ் என்ன சொல்கிறான் தெரியுமா என்று சொல்லி பின்வரும் குரான் வசனத்தை ஓதி காட்டினார்கள்.

 

"உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. "அல்லாஹ்வின் உதவி எப்போது?" என்று (இறைத்)தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர்"

(அல்குரான்-2:214)

 

மேலும் ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். முன்னொரு சமூகம் இருந்தது அவர்கள் இந்த ஏகத்துவத்தை ஏற்றுக்கொண்டதற்காக வேண்டி, சுவனம் வேண்டும் என்று உறுதியாக இருத்தட்காக வேண்டி எவ்வளவு வேதனைப்படுத்தப்பட்டார்கள் தெரியுமா? அவர்கள் ஓரிடத்தில்  ஒன்று சேர்க்கப்பட்டு கூர்மையான வாள்களால் உச்சந்தலையிலிருந்து இரண்டாக பிளக்கப்பட்டனர், இரும்பு சீப்புக்களால் சதைகல் கிளிக்கப்பட்டனர் இருந்தும் பொறுமையாக இருந்தார்கள். இவைகளை நீங்கள் தாங்காமல் இலேசாக சுவனம் செல்லலாம் என்று நினைகிறீர்களா? என்று ஹப்பாபை பார்த்து கேட்டார்கள்.

 

ரசூல் (ஸல்) அவர்களின் மரணத்துக்குப்பின் உமர் (ரலி) ஒரு நாள் மக்களின் முன்

இந்த ஹப்பாபை அழைத்து அவரின் மேலாடையை கலற்றிக்காட்டினார்கள். முதுகுப்பக்கத்திலே தோல்கல் இல்லாமலும், உள்ளிருக்கும் உறுப்புக்கள் கண்ணாடியின் ஊடாக தெரிவது போல் தெரிவதையும் காட்டிவிட்டு கூறினார்கள் இதற்கு முன் மக்கள் இஸ்லாத்துக்காக எவ்வளவு கஷ்டங்களை தாங்கினார்கள் என்று பார்த்தீர்களா என்று கூறினார்கள்.

 

அன்பான சகோதரர்களே இவ்வளவு சோதனைகளுக்கு மத்தியிலும் உறுதியாக இருந்தார்களா இலையா?  அல்லாஹ் சொல்கிறான் உண்மையாக தியாகம் செய்தோரையும், பொறுமையாக இருந்தவர்களையும் பிரித்துக்காட்டிட சோதிப்போம். அதட்கேட்ப அல்லாஹ்வும் சொன்னான்

 

"நான் உங்களை பொருந்திக்கொண்டேன் உங்களுக்கு சுவர்க்கம் தயாராக உள்ளது" (அல்குரான்-9:100)

 

என்று அல்லாஹ் சொல்லும் வரைக்கும் சோதனைகளை அனுபவித்தார்கள்.

 

 

உதாரணமாக சொல்வதானால் இந்த உலகிலேயே நமக்கு இன்பம் தரக்கூடிய விடயங்களில்  ஒன்று தான் நமது பிள்ளைகளின் கல்வி, அதிகாலையில் ஒரு class அதன் பிறகு ஸ்கூல் அதன் பின் இரவு வரை தொடர்ந்து classகள். ஏன் பிற்காலத்தில் நமது  பிள்ளைகள் நல்ல முறையில் இருக்க வேண்டும் அதைப்பார்த்து நாம் சந்தோஷப்பட வேண்டும் என்பது இந்த உலகில் உயர்வான பெறுபேறாக இருப்பதை நாம் காண்கிறோம். 

 

ஆனால் நபிகளார் காலத்திலும் மக்கள் கல்வி கற்றார்கள், ஆசிரியர்கள் அல்லாஹ்வும் அவனது தூதரும், பாடசாலை நபியவர்களின் பள்ளி வாயில், படித்த பாடங்கள் அல்குரான், சுன்னாஹ். இவர்கள் படித்த பாடங்களை பரீச்சை எழுதிய இடம் யுத்தகளம். எதிர்பார்த்த பெறுபேறு மரணம், ஷஹீத் என்ற பதவி.

 

கீழ்வரும் ஹதீஸை பாருங்கள் ஜாபிர் (ரலி) அவர்கள் தமது மகனை அழைத்து 'நான் யுத்தத்துக்காக போகப்போகிறேன் எனக்கு கடன் இருக்கிறது எனது சொத்தை விற்று கடனை அடையுங்கள் உங்களது 6 சகோதரிகளுடனும் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்'

என்று சொன்னார்கள். ஆனால்  நாம் சிந்திக்க வேண்டும் நமக்கு எவ்வளவு ஈமான் இருந்தாலும் நாம்  யுத்தத்துக்கு போனால் திரும்பி வர வேண்டும் என்று தான் எதிர்பார்ப்போம்.

 

உஹத்   யுத்தம் முடிவடைகிறது நபிகளார் யுத்த களத்தில் ஷஹீதானவர்களை பார்த்துக்கொண்டு செல்கிறார்கள் அதட்குப்பின்னால்    ஒரு நபிதோழர் இன்னார் இன்னார் ஷஹீதானார்கள் என்று காட்டிக்கொண்டு போகிறார். ரசூல் (ஸல்) அவர்கள் ஒரு ஜனாசாவிட்கு பின் அப்படியே நிற்கிறார்கள் அதை இருவருக்கும் அடையாளம்காண  முடியவில்லை. அவ்வளவு  சிதைக்கப்பட்ட உடல், அப்பொழுது அங்கு ஒரு பெண்மணி எனது சகோதரரை காணவில்லை என்று வருகிறார்.

 

அப்பொழுது ரசூல் (ஸல்) அவர்கள் அந்த ஜனாஸாவை காட்ட அஞ்சினார்கள் இருந்தும் அப்பெண்ணின் நிலைமையை  கண்டு ஜனாஸாவை காட்டுகிறார்கள். அப்பெண்ணாலும் அந்த ஜனாஸாவை அடையாளம் காண முடியவில்லை யா ரசூலுல்லாஹ் என்கிறார்கள். அதற்கு ரசூல் (ஸல்) அவர்கள் நன்றாக தேடு  ஏதாவது அடையாளம் கிடைக்கும் என்கிறார்கள். அப்பெண் மறுபடி தேடிவிட்டு கையை உயர்த்திக்கொண்டு எழும்புகின்றார் அல்லாஹு அக்பர் எனது சகோதரர் ஷஹீதாஹி விட்டார் விரல் நுனிய வைத்து அடையாளம் கண்டுகொண்டேன் என்கிறார்கள்.

 

ரசூல் (ஸல்) உடன் ஒன்றாக இருந்தவர், தனது சகோதரியால் கூட அடையாளம் காண முடியாத அளவில் இறக்கப்பட்டது எதற்காக என்றால் அல்லாஹ்வின் திருப்தி மட்டும் தான் இலக்கு என்று நினைத்தால் தான்.

 

அப்படியே அடுத்த ஜனாஸாவுக்கு போகிறார்கள் ஹம்ஸா ஷஹீதாகி இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள் ஸபீயா (ரலி) அவர்கள் தங்களின் சகோதரரை பார்க்க வேண்டும் என்று ஓடி வருகிறார் ரசூல் (ஸல்) அவர்கள் ஸபீயாவின் மகனைப்பார்த்து சொல்கிறார்கள் உனது தாயை தடுத்து திருத்து. பார்க்கக்கூடிய நிலையில் அந்த ஜனாஸாவும் இல்லை என்கிறார்கள். மகன் போய் தடுத்தும் கையை தட்டி விட்டு ஷஹீதான எனது சகோதரரை பார்த்தே தீருவேன் என்று போய் பாக்கிறார்கள். பக்கத்தில் அமர்ந்து கொண்டு யா அல்லாஹ் உனது திருப்தி வேண்டுமென்று எனது  சகோதரரர்  மரணித்து இருக்கிறார் அதை நீ நிறைவேற்று  என்று பிராத்திக்கிறார்கள். 

 

ரசூல் (ஸல்) அவர்கள் அடுத்த ஜனாஸாவை பாக்கிறார்கள் அது முஸ்அப் இப்னு உமைர். இவர் மதீனாவுக்கு வர முன் இஸ்லாத்தைப்பரப்பி அந்தளவுக்கு தியாகம் செய்தவர், மக்காவில் மிகப்பெரிய செல்வந்தர் ஆனால் இன்று ஷஹீதாகி இருக்கும் இவருக்கு கபன் செய்ய ஆடை இல்லை முகத்தை மறைத்தால் கால் தெரிகிறது எனவே முகத்தை மறைத்து கால்களுக்கு இழை குலைகளை வைத்து அடக்கினார்கள்.

 

எவ்வளவு சோதனைகள் வந்தபோதும் உறுதியாக இருந்தார்கள்! அவர்கள் செய்ய  நினைத்த தியாகம் உயிர் தியாகம். கஷ்டங்கள், சோதனைகள் இல்லாமல் மரணித்து விட்டு இலகுவாக சுவர்க்கம் செல்லலாம் என்று நினைப்பது தவறாகும். 

 

ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்

 

 "அல்லாஹ் ஒரு கூட்டத்தை நேசிக்க ஆரம்பித்தால் அதற்கு அடையாளம் சோதனைகலை கொடுப்பதாகும்"  (புஹாரி-5645)

 

அவர்கள் இறுதிவரைக்கும் சோதனையோடு இருந்து வெற்றி பெற்றார்கள். இதை தான் அல்லாஹ் கூறுகிறான்.

 

'உங்களுக்கு முன் சென்றோர் சிரமப்பட்டு, இன்னல்களுக்கு உள்ளாகி சுவர்க்கம் சென்றது போல் அல்லாமல் இலகுவாக சுவர்க்கம் செல்லலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்குகிரீர்களா?  என்று கேட்கிறான். 

 

அன்பான சகோதர, சகோதரிகளே இதற்கு மாறாக நமது உடலில் எவ்வித காயமும் படாமல், தியாகங்கள் செய்யாமல், நமது ஆடையில் தூசி படாமல், நாம் சம்பாதித்தவற்றை நல்வழியில் செலவழிக்காமல், வேளா வேளைக்கு பள்ளிக்கு சென்று தொழாமல், இஸ்லாத்தில் உள்ள கடமைகளை சரிவர பின்பற்றாமல், உலக இன்பத்திலே மூழ்கி வாழ்ந்து விட்டு இலாசாக சுவனம் செல்லலாம் என்ற என்னத்தை விட்டு விட்டு நல்ல முறையிலே இறுதி வரைக்கும் அல்லாஹ் நம்மை ஈமானிலே உறுதியோடு வாழவைத்து, தியாகத்தோடும் பொறுமையோடும் அந்த சுவனத்தை சென்றடையக்கூடிய பாக்கியத்தை தந்தருள்வானாக!

 

*SLMFC Media Unit* 

News flash

 •  ஜனாஷாவிட்கு செய்ய வேண்டிய கடமைகள்

   

  =========================

  அஸ்ஸலாமு அழைக்கும் 

  ஆண்களுக்கான மார்க்க வகுப்பு 

  திங்கள் கிழமை மாலை 7:30 மணி முதல் 9:30 மணி வரை 

  Langley Green Community Centre ல்

  நடைபெறும் உங்கள் அனைவரையும் 

  அன்புடன் அழைக்கின்றோம்  

Events

Prayer Timetable

 If you cant View this
Download Adobe reader